Saturday, 6 September 2014

துணை நடிகர் கொலை செய்த நடிகை கைது

சென்னை மதுரவாயலில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை சுருதி என்ற சந்திரலேகா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:-
“திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் 36 வயதுடையவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ். இவர், ஆன்லைன் வர்த்தகம் செய்ததோடு, சென்னையில் மதுரவாயலில் தங்கி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரிடம் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் வட்டிக்கு கடன் வாங்கினர். இதன்மூலம் சில திரைப்படங்களுக்கும் பிரின்ஸ் நிதியுதவி செய்தார்.
திரைப்படத் துறையினரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் ‘கொக்கிரகுளம்’, ‘நெல்லை மாவட்டம்’ ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் வெளிவரவில்லை.
இந்நிலையில் பிரின்ஸ்க்கு, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகை சுருதி என்ற சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
பிரின்ஸ் செல்வச் செழிப்பாக இருந்ததினால் சுருதி அவருடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறப்படுகிறது. இருவரும் மதுரவாயல் எஸ்.ஆர்.எஸ்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவர்-மனைவி போல வாழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி பிரின்ஸின் சகோதரர் ஜஸ்டின், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தனது சகோதரர் பிரின்ஸ் காணவில்லை என்று புகார் செய்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஜஸ்டின் புகார் அளித்த சில நாள்களுக்குப் பின்னர் சுருதி, தனது கணவரைக் காணவில்லை என்று மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையே பாளையங்கோட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிரின்ஸின் சொகுசு காரை நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரின்ஸின் பழைய நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த உமாச்சந்திரன் என்பவர், அந்தக் காரை சுனில் குமாருக்கு விற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் உமாச்சந்திரனின் நண்பர்கள் ஆனஸ்ட்ராஜ் என்ற சதாம், காந்திமதிநாதன் என்ற விஜய், ரபீக் உஸ்மான் கனி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் நடிகை சுருதி உமாச்சந்திரன் உள்பட 6 பேர் சேர்ந்து கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மதுரவாயல் எஸ்.ஆர்.எஸ்.நகரில் உள்ள வீட்டில் பிரின்ஸை விஷ ஊசி போட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து, பின்னர் அவர் சடலத்தை காரில் கடத்தி பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஐ.ஓ.பி. காலனி அருகே புதைத்ததாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, பிரின்ஸின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும், இந்த வழக்கு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து, மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் உமாச்சந்திரன், நடிகை சுருதி உள்ளிட்டோரைக் கைது செய்ய கோயம்பேடு உதவி ஆணையர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் நடிகை சுருதி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், காவல் துறையினர் அவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை பிரின்ஸ் ஆபாச திரைப்படங்களில் நடிக்கக் கோரி சித்திரவதை செய்ததாகவும், அடிக்கடி அடித்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் ஏற்கெனவே பிரின்ஸால் ஏமாற்றப்பட்ட உமாச்சந்திரன் மூலம் பிரின்ஸை கொலை செய்ததாக சுருதி கூறியதாக“ காவல் துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த ரூ.75 லட்சம், தங்கம், மற்றும் வைர நகைகள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள உமாச்சந்திரன் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment