Wednesday, 10 September 2014

சீதனம் கேட்டு இளம்பெண்ணை 3 வருடங்கள் குளியலறையில் அடைத்து வைத்த கொடூரம்

பீகார் மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை 3 வருடங்கள் குளியலறையில் பூட்டி வைத்த கொடுமை நடந்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் பத்சன் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், ராம்பாக்கை என்ற இடத்தை சேர்ந்தவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணமானதில் இருந்து கணவரும் கணவரின் பெற்றோரும் அந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் அவரது குடும்பம் கூடுதல் வரதட்சணை கொடுக்கும் நிலையில் இல்லை.
இதையடுத்து அந்தப் பெண்ணை வீட்டுக்குள் உள்ள குளியல் அறையில் போட்டு பூட்டி வைத்தனர். அவருக்கு துணிமணிகள் கொடுப்பது இல்லை. தலைக்கு தேய்க்க எண்ணையும் கொடுக்கவில்லை. மேலும் பசிக்கு உணவு கொடுக்காமல் எப்போதாவதுதான் சாப்பாடு போடுவார்கள். இதனால் அவர் உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்ததால் குழந்தையை பார்க்க கூட அனுமதிக்கவில்லை.
மகளை பார்க்க வந்த பெற்றோரரையும் ஏதாவது சொல்லி விரட்டியடித்தனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் தந்தை ஷியாம்சுந்தர்சிங் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மகளிர் காவல்துறை ஆய்வாளர் சீமாகுமாரி அந்த வீட்டுக்கு வந்து அதிரடியாக புகுந்து அங்கு குளியல் அறையில் அடைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டார்.
கிழிந்து போன ஆடைகளுடன் தலை காய்ந்து, உடல் மெலிந்து பரிதாபமாக காட்சி அளித்தார். தற்போது அவரது மகளுக்கு 3 வயது ஆகிறது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர், மாமனார் திரேந்திரசிங், மாமியார் இந்திராதேவி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment