சென்னையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபாசப்படம் எடுத்து மிரட்டி ஆசைக்கு இணங்கச் சொன்ன அக்குபஞ்சர் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராதா (39) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் அளித்து கூறியதாவது:அம்பத்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளேன். காலையில் சென்று மாலையில்தான் திரும்புவேன்.
எனக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பயன் இல்லை. எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அம்பத்தூர் சாரங்கபாணி தெருவில் உள்ள அக்கு பஞ்சர் மருத்துவர் சதீஷ் கண்ணாவிடம் (24) சிகிச்சை பெற்றால் எந்த வகையான நோய் என்றாலும் உடனடியாக சரியாகி விடும். பக்க விளைவுகள் ஏதும் இருக்காது. கட்டணமும் மிக மிக குறைவு என்று ஆலோசனை கூறினர்.
இதனால் சில தினங்களுக்கு முன் சதீஷ் கண்ணாவிடம் சிகிச்சைக்கு சென்றேன். கனிவுடன் பேசினார். நோயை உடனடியாக குணப்படுத்தி விடலாம் என்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டார். சற்று நேரத்தில் நான் மயங்கி உள்ளேன். இதை பயன்படுத்தி என்னை பல கோணங்களில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். வீடியோவும் பதிவு செய்து வைத்துள்ளார்.
அந்த படங்களை என்னிடம் காண்பித்து எனது ஆசைக்கு இணங்க மறுத்தால் ஆபாச காட்சிகளை வெளியிட்டு விடுவேன். இணையதளத்திலும் பரவி விடும். பிறகு நீ வெளியில் தலைகாட்ட முடியாது. தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று மிரட்டினார். மேலும், எனது மகளையும் வெளிநாடு கடத்தி சென்று விடுவதாக பயமுறுத்துகிறார். எனவே, அக்குபஞ்சர் மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி அழுதார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ராஜேஷ் கண்ணா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவரை ஆய்வாளர் அன்புக்கரசி கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
0 comments:
Post a Comment